

மறைந்து போன/ போகும் அறநெறி வகுப்புகள்!
அருண் செல்வராஜ்
ஒரு சமூகத்தின் நல்வளர்ச்சியில் சமயங்களின் பங்கு பாரிய இடத்தை வகிக்கிறது , எல்லா மதங்களும் நல்ல கொள்கைகளை வழியுத்துகிறது , ஒரு மனிதனை நல் வழிப்படுத்தவே மதங்கள் உருவாக்கப்பட்டன . கோட்பாடு அடிப்படையில் அல்லது பயத்தின் அடிப்படையில் அல்லது பின்பற்றுதலின் மூலம் ஒரு மனிதனை நல் வழிபடுத்தவதே மதங்கள் ஆகும்.
கடந்த காலங்களில் எல்லா கிராமப்புறங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கு மத சார்பான வகுப்புகள் எடுக்கப்படும் , குறிப்பாக பாடசாலை பாடங்களை உள்ளடக்கி பல நல்நெறி சார்ந்த விழுமியங்கள் கற்பிக்கப்படும். அது மதங்களை கடந்து ஒரு சமூகத்தின் நல்ல பிரஜைகள் உருவாகுவதற்கு பெரிதும் வழிவகுத்தது .
ஆனால் தற்காலத்தில் இவ்வாறான அறநெறி சார்ந்த வகுப்புகளையோ அல்லது அது தொடர்பான பாடத்திட்டங்களையோ எவரும் பின்பற்றாமை காணப்படுகிறது என்பது ஏதோ ஒரு வகையில் நாம் எமது பாரம்பரிய விழுமியங்களை இழக்கிறோம் அல்லது அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்ல தவறுகிறோம் என்பதே உண்மை .
முந்தய காலப்பகுதிகளில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அந்த பிரதேச ஆலய குழுவினர் இணைந்து இவ்வாறான வகுப்புக்களை சனிக்கிழமைகளில் ஏற்பாடு செய்வார்கள் , அது அந்த மாணவர்களின் ஒழுக்கம் , சமயம் சார்ந்த கற்றல் நடவடிக்கைளில் பாரிய முன்னேற்றங்களை அது ஏற்படுத்தி இருந்தது .
ஆனால் கால போக்கில் இவ்வாறான விடயங்கள் மறைந்து அல்லது குறைந்து வருகின்றமை ஒரு சமூகத்தின் ஒழுக்கம் அல்லது அதன் விழுமியங்களில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் . கிறிஸ்தவ தேவாலயங்கள் , இஸ்லாமிய பள்ளிவாயல்களில் சைவ ஆலயங்களில் கூட குறிப்பிட்ட நாட்களில் மத அனுஸ்டானங்களே நடக்கிறதே தவிர்த்து இளைய தலைமுறையினர் பின்பற்ற கூடிய விடயங்கள் சொல்லி கொடுக்கபடுகிறதா என்பது சந்தேகமே !
மேலும் இவ்வாறான கற்றல் நடவடிக்கைளில் ஈடுபடும் ஆசிரியர்கள் கூட தனியார் வகுப்புக்கள் போன்றவற்றின் மீது அதிக நாட்டம் கொள்ளுவதாலும் , ஆலய நிருவாகங்களின் கவனங்கள் வேறு திசைகளுக்கு திரும்பி உள்ளதாலும் ஒரு சமூகத்தின் மீதான அக்கறை அல்லது எதிர்காலம் மீதான கேள்விகளில் பாரிய பயத்தை ஏற்படுத்துகிறது .
வரும் காலங்களில் பாடசாலை சமூகமும் , ஆலய சமூகங்களும் இணைந்து சமூக நோக்கத்தோடு இவ்வாறான விடயங்களில் அக்கறை செலுத்த வேண்டும் , நாளைய தலைமுறையினரின் சமூகத்தை ஆரோக்கியமாக மாற்ற இன்றே சில விடயங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளதை அனைவரும் உணர வேண்டும் .
நாட்டு மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள இன்றய காலகட்டத்தில் , அவர்களின் குடும்பம் சார்ந்த வாழ்க்கையில் பாரிய தாக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது . அது குழந்தைகளின் வாழ்க்கை முறைகளிலும்
அவர்களின் மனோ நிலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது , ஆக அவர்களை ஏதோ ஒரு வகையில் கட்டுப்படுத்த வேண்டியதும் , வழிப்படுத்த வேண்டியதும் சமூகத்தின் பொறுப்பு ஆகும் , ஆகவே இது போன்ற அறநெறி வகுப்பு விடயங்கள் பிள்ளைகளின் மன நிலைகளில் ஏதோ ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே மறை(ற )ந்து போன அறநெறி வகுப்புக்களை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பினால் நாளைய சமூகம் சிறப்பானதாக அமைய வழிவகுக்கும் .