மலையகத்தை காப்பாற்ற மீண்டும் வந்த காமன் கூத்து!

மலையகத்தை காப்பாற்ற மீண்டும் வந்த காமன் கூத்து!

சத்தியநாதன் கிளின்டன்

மலையக மக்கள் மீது பார்வையை செலுத்தும் பண்பாட்டு வடிவங்களில் மலையக மக்களின் இன அடையாளத்தையும் இன பிரதிநிதித்துவ இன வரவியல் அடையாளங்களை முன்னிறுத்தி காட்டும் அழகியல் படிவமாக கூத்துக் கலைகள் காணப்படுகின்றன. குறிப்பாக மலையக மக்களின் அடையாளங்கள் வரலாற்று இருப்புகளை நிலைநிறுத்தி காட்டுவதற்கு இந்த கூத்துக்கலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றன. மலையக மக்களுக்கு என ஒரு தனித்துவமான வீட்டுரிமை காணி உரிமை இல்லாத தற்கால சூழலில் மலையக மக்களை அடையாளப்படுத்தும் ஒரு வரலாற்று அடையாளமாக கூத்து கலைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் முதன்மை தாய்மை கூத்தாக காமன் கூத்து அல்லது காமன்டி பண்டிகை என மாசி மாதம் தோறும் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு கூத்து வடிவமாக காமன் கூத்து வடிவம் காணப்படுகின்றது. அதாவது ஒரு இன மக்களின் வரலாற்று பதிவுகளையும் வரலாறு சார்ந்த விடயங்களையும் அழிக்க வேண்டும் என எண்ணும்போது அவ் இனத்தின் அடையாளங்களை முதலில் அழிக்க வேண்டும். ஒரு இனத்தின் அடையாளங்களையும் பண்பாட்டு விடயங்களையும் தானாக அழித்துக் கொண்டாலும் அல்லது வேறு இன ஆக்கிரமிப்பு நிகழும்போது ஓர் இனத்தின் அடையாளங்களை அழித்துவிட்டால் அவ்வினம் தானாக அழிந்து விடக்கூடும். அந்த வகையில் மலையக மக்களின் 200 வருட அடையாளங்களை தற்காலம் வரை கூத்துகள் என்ற கலை வடிவம் ஆணிவேரை போன்று தாங்கிக் கொண்டு வருகின்றது.

தற்கால நவீன சூழலில் கலை கலாச்சாரம் பண்பாடு விழுமியங்கள் என்ற சொல்லிற்கு ஏற்ப செயல்படும் கூட்டங்கள் குறைவாக காணப்படுகின்றன. கூத்துகளை பாதுகாக்க வேண்டிய தற்கால சூழலில் மலையக மக்களின் அடையாளங்களை அழித்து நாமே அழித்துக் கொள்ளும் சூழல் காணப்பட்டு வருகின்றது. தெளிவாக கூறும் போது தற்கால மலையக மக்கள் மலையக அடையாளங்கள் கூத்துக்களை அடையாளங்களாக பார்க்காமல் அதனை ஒரு பொழுதுபோக்காகவும் சாதிய வேறுபாடுகளை கொண்ட விடயங்கள் என்ற ரீதியில் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால் கூத்துக்களை சாதிய அடிப்படையில் பார்க்கக்கூடிய நிலை மலையகத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் காணப்படுகிறது. காமன் கூத்து பண்டிகை நவீன நாகரிக வளர்ச்சி ,சாதிய வேறுபாடு , இளைஞர்கள் மத்தியில் பரவலாக பரவ தொடங்கும் போதை பொருள் பாவனை காரணமாக பெரும்பாலான பிரதேசங்களில் இந்த கூத்து வடிவங்களை கைவிட்டுவிட்டனர். மலையக மக்களின் வாழ்வியலை அடையாளமாக கொண்ட இந்த கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் அழிந்து வரும் சூழலில் பொகந்தலாவை பூசாரி டிவிசன் தோட்ட மக்களாலும் தோட்ட நிர்வாக உறுப்பினர்களும் மற்றும் இளைஞர்களாலும் மலையக அடையாளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொகவந்தலாவ பூசாரி டிவிஷன் தோட்டத்தில் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு காமன்கூத்து பண்டிகை பக்தி மற்றும் நம்பிக்கை அடிப்படையில் செய்து வந்தனர் . பிற்காலங்களில் ஆலய கட்டுமான பணிகளுக்காக காமன் கூத்து கலை வடிவம் கைவிடப்பட்டிருந்தது. சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு ஆலயம் கட்டப்பட்டு முதன்முறையாக இந்த வருடம் காமன் கூத்து பண்டிகை மிக கோலாகலமாக நிகழ்த்தப்பட்டது.

பொகவந்தலாவ பிரதேசங்களில் சிறுதெய்வ வழிபாடுகளும், கூத்துக் கலைஞர்கள் என எல்லா இடங்களிலும் பரவி காணப்படுகின்றனர். இந்த வகையில் பொகவந்தலாவ பிரதேசங்களில் எவ்வாறு கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்ற சூழலில் பொகவந்தலாவ பிரதேசத்தை போதைப் பொருள் பாவனை அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் அதிக போதைப்பொருள் பாவனை பாடசாலை மாணவர்களை மையமாக கொண்டும், அதிக போதைப்பொருள்களால் தன் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் செய்திகள் பரவலாக பரவிய வண்ணம் காணப்படுகின்றன. தற்பொழுது கட்டுப்படுத்த முடியாத ஒரு கொடிய நோயாக போதைப் பொருள் பாவனை பரவி வருகின்றது. இதிலிருந்து பாடசாலை மாணவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என சமூக ஆர்வலர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் தனது இன அடையாளங்களோடு போதைப் பொருள் பாவணையை இல்லாது செய்வது எப்படி என்ற யோசனை தோட்ட மக்களால் முன்வைக்கப்பட்டன. இதன் பிரதி முகமாக மாசி மாதங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் காமன் கூத்து எங்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. பாடசாலை மாணவர்களிடம் எவ்வாறு போதைப்பொருள் பாவணையை எவ்வாறு கொண்டு சேர்க்கின்றார்களோ ? அதனைப் போன்று எங்கள் ஊர் மக்கள் கூத்துக் கலைகளையும் மாணவர்களோடு ஒன்றித்து செயல்பட தொடங்கியுள்ளோம். கூத்துகளில் வரும் கதாபாத்திரங்களை பெரும்பாலான கதாபாத்திரங்களை பாடசாலை மாணவர்களை உட்புகுத்தி அவர்களே ஆற்றுகை செய்யும்போது தனது பக்தி உணர்வோடும் விரத முறைகளோடு பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொண்டு பல பிரதேசங்களில் போதைப்பொருள் பாவணைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில் பொகவந்தலாவ பூசாரி டிவிஷன் மக்கள் கூத்து கலைகளில் பாடசாலை மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து போதைப்பொருள் பாவணையில் இருந்து விடுபடவும் இவ்வாறு சமயம் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தி போதைப்பொருள் என்ற சிந்தனை விடுபட
ஒரு காரணியாக அமையும்.

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மலையக மக்களின் அடையாளங்களை போதைப் பொருள் பாவனை அழித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்று எவ்வாறு ஒரு விடுதலையைதேடி எழுச்சி பெற வேண்டிய ஒரு சூழலில் காணப்படுகின்றதோ அதேபோன்று எங்கெல்லாம் போதை பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகின்றதோ அங்கே எல்லாம் இவ்வாறான மலையக கூத்து அடையாளங்களை பின்பற்றி நம்மை நாமே விடுதலை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கலை வடிவமாக காமன் கூத்தை பாதுகாத்து எமது அடுத்த சந்ததியர்க்கு கையளிப்பு செய்து நம் சமூகத்தை பாது கொள்ள முடியும்.

CATEGORIES
Share This