

பெண்கள் மீதான மரியாதை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடி
பிரதமர் மோடி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக துறைவாரியாக இணையவழி கலந்துரையாடல் கூட்டங்களில் பேசி வருகிறார்.
பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பாக நேற்று இணையவழி கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
மத்திய அரசின் ‘முத்ரா’ திட்ட கடன்களை பெற்றவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். அவர்கள் தங்கள் குடும்பத்துக்கான வருவாயை பெருக்குவதுடன் மட்டுமின்றி, நாட்டுக்கான புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்கள். பெண்கள் மீதான மரியாதையின் அளவை அதிகரிப்பதன் மூலமும், சமத்துவ உணர்வை அளிப்பதன் மூலமும்தான் இந்தியா முன்னேறிச் செல்ல முடியும்.
கடந்த 9 ஆண்டுகளில், பெண்கள் மேம்பாடு என்பது பெண்கள் தலைமையிலான மேம்பாடாக வளர்ந்துள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது கண் எதிரில் தெரிகிறது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஒப்படைக்கப்பட்ட 3 கோடி வீடுகளில் பெரும்பாலானவை பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் அவர்களுக்கு சொத்து கிடைத்துள்ளது.
தீர்மானிக்கும் திறன், மனஉறுதி, சிந்தனைத்திறன், இலக்கை எட்ட பாடுபடும் திறன் போன்றவை பெண்சக்தியின் வலிமைகள். இவை இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பெரும் பங்கு வகிக்கின்றன. இன்று பெண்களுக்கு அதிகாரம் அளித்ததால், சமூக வாழ்க்கையில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் உயர்நிலைப்பள்ளி மற்றும் அதற்கு மேல் படிக்கும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. என்றார்.