மட்டு. மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கனடாவிலிருந்து இரண்டு திட்டங்களுக்கு முதலீடு!

மட்டு. மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கனடாவிலிருந்து இரண்டு திட்டங்களுக்கு முதலீடு!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கனடாவிலிருந்து இரண்டு திட்டங்களுக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு திட்டம் சுமார் 10கோடி ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்றைய தினம் மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானதுடன் வழமையான சபை சம்பிரதாயங்களுடன் 71வது மாதாந்த அமர்வு ஆரம்பமானது.

எதிர்வரும் 19ஆம் திகதியுடன் உள்ளுராட்சிமன்றங்களின் அதிகாரங்கள் விசேட ஆணையாளர்களிடம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ள நிலையில் இன்றைய அமர்வானது இறுதி அமர்வாக நோக்கப்பட்டு சபை அமர்வு நடைபெற்றது.

இதன்போது தான் அண்மையில் மேற்கொண்ட கனடா பயணத்தின் பலனாக பலர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலீடுகளை செய்வதற்கு ஆர்வத்தினை வெளிப்படுத்தியதாகவும் முதல் கட்டமாக இரண்டு முதலீடுகள் உடனடியாக செய்யப்பட்டதுடன் அவற்றில் ஒரு முதலீடு இளைஞர் விவசாய திட்டத்தினை நோக்காக கொண்டு சுமார் பத்துக்கோடி ரூபா செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகரசபை முதல்வர் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சபையில் உள்ள நிலையியற் குழுக்களினால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் சபையில் கொண்டுவரப்பட்டு சபையின் அங்கீகாரம் பெறப்பட்டதுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

அமர்வின் போது மாநகர பொறியியலாளர் குறித்த விடயங்கள் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது பொறியியலாளரின் செயற்பாடுகளை தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை தொடர்பில் சில உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதன்போது பொறியியலாளரின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் காரணமாக மாநகரசபை பாரிய நிதி இழப்பீடுகளை அடைந்துள்ளதாகவும், அதனை மேலும் மேலும் அதிகரிக்காதிருக்கவே இவ்;வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதல்வரால் தெரிவிக்கப்பட்டு, இது தொடர்பிலான பூரண விளக்கம் மாநகரசபை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் விளையாட்டு, சுகாதாரம், வேலைப்பகுதி ஆகிய நிலையியற் குழுக்களின் தலைவர்களால் அக்குழுக்களினால் சிபாரிசு செய்யப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டு அதற்கு சபை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This