

பொலிஸாரால் கொல்லப்பட்ட சுலக்சனின் பிறந்தநாள்
பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் பிறந்தநாள் நினைவு, அவரது குடும்பத்தினரால் அனுஷ்டிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு ஒக்டேபர் மாதம் 21ஆம் திகதி இரவு, வீடு திரும்பிக்கொண்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்சன் மற்றும் ந.கஜன் ஆகியோர் கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 7 வருடங்கள் நிறைவடைந்தும் படுகொலையானவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரான சுலக்சனின் 31ஆவது பிறந்த தினமே, சுன்னாகத்தில் மாணவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட பயணிகள் பஸ் தரிப்பிடத்தில் நேற்று (08) அனுஷ்டிக்கப்பட்டது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், மாணவர் சுலக்சனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது மாணவர் சுலக்சனின் குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.