

வரலாற்றில் இன்று – மார்ச் 09: சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன – 1986
1815 – மின்கலத்தால் இயக்கப்படும் மணிக்கூடு பற்றி முதன்முதலாக ஆங்கிலேயப் பொறியியலாளர் பிரான்சிசு ரொனால்ட்சு எழுதினார்.
1842 – கலிபோர்னியா தங்க வேட்டைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாளில் கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் மெக்சிக்கோவைத் தாக்கின.
1896 – ஆத்வா நகர சமரில் இத்தாலி தோல்வியடைந்ததை அடுத்து, இத்தாலியின் பிரதமர் பிரான்சிசுக்கோ கிருசுப்பி பதவி துறந்தார்.
1916 – மெக்சிக்கோ புரட்சி: ஏறத்தாழ 500 மெக்சிக்கர்கள் எல்லை நகரான நியூ மெக்சிக்கோவின் கொலம்பசு நகரைத் தாக்கினர்.
1923 – விளாதிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: டச்சு கிழக்கிந்திய இராணுவம் மேற்கு சாவகத்தில் நிபந்தனை எதுவுமின்றி சப்பானியப் படைகளிடம் சரணடைந்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஐந்து-நாள் சமரைத் தொடங்கின.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவ வானூர்திகள் எசுத்தோனியா தலைநகர் தாலினைத் தாக்கின.
1945 – இரண்டாம் உலகப் போர்: இந்தோ சீனாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஜப்பானியப் படையினர் பிரான்சியரை ஆட்சியில் இருந்து அகற்றியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
1946 – இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் விளையாட்டரங்கில் இடம்பெற்ற நெரிசலில் 33 பேர் உயிரிழந்தனர்.
1956 – நிக்கித்தா குருசேவின் ஸ்டாலினுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
1957 – அலாஸ்காவில் அலூசியன் தீவுகளில் ஏற்பட்ட 8.6 அளவு நிலநடுக்கத்தில் பலத்த சேதமும் ஆழிப் பேரலையும் ஏற்பட்டது.
1959 – பார்பி பொம்மை நியூ யோர்க் நகரில் அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.
1960 – பெல்டிங் இபார்ட் இசுக்ரிப்னர் என்பவர் தான் கண்டுபிடித்த இடைக்கடத்தி ஒன்றை நோயாளி ஒருவருக்குப் பொருத்தினார். இவ்விடைக்கடத்தி அந்நோயாளி முறையாக இரத்தத்தூய்மிப்புப் பெற அனுமதிக்கிறது.
1961 – சோவியத்தின் ஸ்புட்னிக் 9 விண்கலம் இவான் இவானொவிச் என்ற மனிதப் போலியை வெற்றிகரமாக விண்வெளிக்குக் கொண்டு சென்றது. இதன் மூலம் சோவியத் ஒன்றியம் மனித விண்வெளிப்பறப்புக்கு தயாரென அறிவித்தது.
1967 – அமெரிக்காவின் இரு விமானங்கள் ஒகையோ மாநிலத்தில் வானில் மோதிக் கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர்.
1976 – இத்தாலியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கம்பிவட ஊர்தி கீழே விழுந்ததில் 15 சிறுவர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர்.
1977 – இஸ்லாமியத் தீவிரவாதிகள் வாசிங்டன், டி. சி.யில் மூன்று கட்டிடங்களை 39 மணிநேரம் கைப்பற்றி வைத்திருந்ததில் 2 பேர் கொல்லப்பட்டு, 149 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
1986 – சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.
1997 – சீனா, மங்கோலியா, கிழக்கு சைபீரிய வானியலாளர்கள் பகல் நேரத்தில் ஏல்-பாப் வால்வெள்ளியைக் கண்ணுற்றனர்.
2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.
2011 – டிஸ்கவரி விண்ணோடம் தனது 39ஆவதும், கடைசியுமான பயணத்தை முடித்து பூமி திரும்பியது.
2012 – காசாக்கரையில் இருந்து 130 ஏவுகணைகள் இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்டன.