

பாகிஸ்தான் சிறைகளில் குஜராத் கடற்தொழிலாளர்கள்!
அரபிக்கடலில் மீன் பிடிக்கச் சென்று தவறுதலாக பாகிஸ்தான் கடற்பகுதிக்குச் சென்றுவிடும் குஜராத் மாநில கடற்தொழிலாளர்களை அந்நாட்டு கடற்பகுதி பாதுகாப்பு அமைப்பு கைது செய்து சிறையில் அடைத்துவருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி கணக்குப்படி குஜராத் கடற்தொழிலாளர்கள் 560 பேர் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, குஜராத் சட்டசபையில் நேற்று ஒரு கேள்விக்குப் பதிலளித்த மாநில கடற்தொழில்வளத்துறை அமைச்சர் ராகவ்ஜி படேல் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 274 குஜராத் கடற்தொழிலாளர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டில் 193 பேரும், கடந்த ஆண்டில் 81 பேரும் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அதேநேரம் கடந்த 2 ஆண்டுகளில் 55 குஜராத் கடற்தொழிலாளர்கள் பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.
பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் 323 குடும்பங்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு தினசரி ரூ.300 உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் 428 குடும்பங்களுக்கு இவ்வாறு உதவித்தொகை அளிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.