ஜிப்ரால்டார்: கடல் கடந்த பிரித்தானிய ஆதிக்கம் தளர்கிறதா ?… பிரிட்டனை அச்சுறுத்தி மிரட்டும் ஸ்பெயின் !
ஐங்கரன் விக்கினேஸ்வரா
பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து ஜிப்ரால்டார் பகுதியை தங்களிடம் ஒப்படைக்க ஸ்பெயின் காலங்களாக கோரி வருகிறது. ஜிப்ரால்டார் பிரச்னை பல ஆண்டுகளாக பிரித்தானியா – ஸ்பெயினுக்கு இடையிலான முக்கிய அரசியல் விவகாரமாக உள்ளது. ஜிப்ரால்டரில் ( Gibraltar) கடுமையான எல்லைக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என தற்போது பிரித்தானியாவை ஸ்பெயின் மிரட்டியுள்ளது.
சாகோஸ் தீவுகளை கைவிட்ட பிரிட்டன்:
பிரிட்டிஷ் அரசாங்கம் சாகோஸ் தீவுகளின் கட்டுப்பாட்டை கைவிட்டு, மொரீஷியஸுக்கு இறையாண்மையை ஒப்படைப்பதாக அண்மையில் அறிவித்தது. தற்போது ஜிப்ரால்டார் தளத்தின் கடல் கடந்த பிரித்தானிய ஆதிக்கம் தளர்கிறதா எனும் ஐயமும் எழுந்துள்ளது.
1713 ஆம் ஆண்டு உட்டிரிச் உடன்படிக்கையில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து வரும் பிரதேசத்தினை ஆண்டு தோறும் மீண்டும் உறுதிப்படுத்துவது வழக்கமானது.
ஆனால் ஸ்பெயினில் பொது மக்கள் ஜிப்ரால்டரின் இறையாண்மை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது என எண்ணுகின்றனர். இப்பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு, அமைதியான சகவாழ்வே மிகவும் முக்கியமானது என உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.
ஸ்பானிய வலது மற்றும் தீவிர வலதுசாரி கட்சிகள் எப்போதும் பிரிட்டிஷ் இறையாண்மையை அங்கீகரிப்பதாக கருதப்படும் சம்பிரதாயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வழமை.
ஜிப்ரால்டார் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்:
ஜிப்ரால்டார் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருப்பது ஸ்பெயினுக்கு பல ஆண்டுகளாக மிக உறுத்தலாகவே உள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர், தற்போது நிலமை மேலும் சிக்கலாக உள்ளது.
ஜிப்ரால்டாருக்கான பிரெக்சிட்க்கு பிந்தைய ஒப்பந்தத்தை பிரித்தானியா ஏற்காவிட்டால், கடுமையான எல்லையை அமுல்படுத்துமென தற்போது ஸ்பெயின் எச்சரித்துள்ளது. ஜிப்ரால்டரில் ஸ்பெயின் படைகள் கூட நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசே மாணுவல் ஆல்பாரஸ், ஜிப்ரால்டரை அண்டியுள்ள ஆன்டலூசியாவில் செய்தியாளர்களை சந்தித்து, பிரெக்சிட்க்கு பிறகு யூரோப்பிய ஒன்றியத்தின் புதிய டிஜிட்டல் எல்லை கட்டுப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தவதாக ஓர் தகவலை வெளியிட்டார்.
1713 உட்டிரிச் உடன்படிக்கை:
ஜிப்ரல்டார் பிராந்தியம் இந்த நீரிணையில் அமைந்துள்ள பிரித்தானியாவின் கடல் கடந்த தளமாகும். இதன் வட எல்லையில் ஸ்பெயின் அமைந்துள்ளது. அத்துடன் ஜிப்ரல்டார் பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது. தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்று அங்கே அமைந்துள்ளது.
இத்தளத்தின் மூலமாக ஆட்சியுரிமைத் தொடர்பாக ஸ்பெயினுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நிகழ்கிறது.
1713 ஆண்டின் உட்டிரிச் உடன்படிக்கையின் படி ஸ்பெயின் இப்பிரதேசத்தின் ஆட்சியைக் கோருகிறது. எனினும் இங்கு வாழும் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் ஸ்பெயினுக்கு ஆட்சி கைமாறுவதையோ அல்லது ஸ்பெயினுடனான இணை ஆட்சிக்கோ விரும்பவில்லை.
ஜிப்ரால்டார் ஷெங்கன் பகுதியாகுமா ?
பிரித்தானியா மற்றும் யூரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான ஒரு முன் மொழியப்பட்ட ஒப்பந்தம் ஜிப்ரால்டரை ஷெங்கன் பகுதியாக சேர்ப்பதை அறிவித்துள்ளது.
இதனால் நில எல்லை கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும், ஜிப்ரால்டரின் விமான நிலையம் மற்றும் துறைமுகம் வழியாக வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக ஸ்பெயின் பாதுகாப்புப் படையினர் இருக்க வேண்டுமென மாட்ரிட் அரசு வலியுறுத்தியுள்ளது.
புதிய எல்லை கட்டுப்பாட்டு முறை ஜிப்ரால்டரின் ஒப்பந்தத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டதல்ல என்றாலும், இரு எல்லைகளிலும் ஆயிரக்கணக்கான குடிமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய குடிமக்கள் உள்ளிட்ட ஐரோப்பியர் அல்லாத குடிமக்கள் 180 நாட்களில் 90 நாட்கள் மட்டுமே ஸ்பெயினில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். கூடவே, எல்லை காவலர்களிடம் ஏன் தாங்கள் ஸ்பெயினுக்கு வரவிரும்புகிறார்கள் என்பதை விளக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள்.
பிரெக்சிட்டின் வீழ்ச்சி:
ஜிப்ரால்டரில் உள்ள 96% வாக்காளர்கள் 2016 வாக்கெடுப்பில் பிரெக்சிட்டை நிராகரித்தனர்.
இப்போது அதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர்.
இது 34,000 மக்களுடன், ஸ்பெயினில் இருந்து நில எல்லையை கடக்கும் 15,000 தினசரி பெரும்பாலும் வேலைக்காக வருபவர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.
இதுவரை பல பிரெக்சிட் விதிகள் அங்கே அமல்படுத்தப்படவில்லை. மேலும் சில கட்டுப்பாடுகள் இருதரப்பிலும் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், நவம்பரில் தொடங்கி, EU அல்லாத குடிமக்களுக்கான புதிய EU பயோமெட்ரிக் கட்டுப்பாட்டுத் தேவைகள் எல்லையில் ஒரு பாரிய தடையை உருவாக்கும் என கூறப்படுகிறது.
ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையம் இடையே பல பேச்சுக்கள் நடந்த போதிலும், எந்த உடன்பாடும் இன்னும் இதுவரை எட்டப்படவில்லை.
இருப்பினும் ஜிப்ரால்டார் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாஸ்போர்ட் இல்லாத ஷெங்கன் பகுதியில் சேரலாம் என்பது பொதுவான கொள்கையாகும்.
தற்போதைய பதட்டங்கள் ஜிப்ரால்டரின் விமான நிலையம் மற்றும் அதன் துறைமுகத்தில் ஸ்பெயின் போலீஸ் ரோந்து மற்றும் சோதனைகளை நடத்தும் பிரச்சினைகளை உருவாக்கி உள்ளது.
பிரிட்டனில் உள்ள சிலருக்கு, ஜிப்ரால்டார் அதிக ஸ்பானியமாக அல்லது அதிக ஐரோப்பிய நாடாக மாறியிருப்பதை இது போன்ற ஆட்சி அடையாளப்படுத்தும்.
பிரெக்சிட்க்கு பிறகு – ஜிப்ரால்டரின் குடியுரிமை:
பிரெக்சிட்க்கு பிறகு, ஜிப்ரால்டரின் குடியுரிமை அட்டையைப் பெற்றுள்ளவர்கள் ஸ்பெயினை எளிதாகத் தாண்ட அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல், 15,000 ஸ்பானிய தொழிலாளர்களும் தினசரி ஜிப்ரால்டரில் எளிதாக வர்த்தகம் செய்ய முடிந்தது.
ஜிப்ரால்டரின் மக்களின் சுதந்திர போக்குவரத்தை தடை செய்ய வேண்டுமா, அல்லது ஸ்பெயின் வழங்கும் அதிகளவு தன்மையுள்ள ஒப்பந்தத்தை ஏற்க வேண்டுமா என்பதை பிரித்தானியா தான் முடிவு செய்ய வேண்டும் என ஸ்பெயின் அறிவித்துள்ளது.
ஜிப்ரால்டரில் ஸ்பானிய படையினருக்கு அனுமதி கிடையாது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் இல்லாவிட்டால், ஜிப்ரால்டரின் அரசு தங்களது புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
ஜிப்ரால்டரை பிரித்தானியாவின் சிற்றரசு என்று ஸ்பெயின் கருதுகின்றது. இது ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு முரணானது எனவும் ஸ்பெயின் வாதிடுகிறது.
யூரோ கிண்ண சர்ச்சை:
யூரோ கிண்ணத்தை (UEFA – Euro 2024) ஸ்பெயின் வென்றதன் பின்னர் நடந்த கொண்டாட்டங்களில் Gibraltar என்பது ஸ்பெயின் ஒரு பகுதி என முழக்கமிட்ட இரு வீரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நட்சத்திர வீரர்களான Rodri மற்றும் Alvaro Morata ஆகிய இருவரும் தற்போது தடை விதிக்கப்படும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றியைப் பதிவு செய்தது ஸ்பெயின் அணி.
இந்த நிலையில், இதன் அடுத்த நாள் மாட்ரிட் நகரில் பல ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் முன்னிலையில் Rodri குறித்த Gibraltar என்பது ஸ்பெயின் ஒரு பகுதி முழக்கத்தை முன்வைத்தனர்.
ஜிப்ரால்டாரின் எதிர்கால நிலை ?
ஜிப்ரால்டாரில், குடிமக்கள் தங்கள் பிரிட்டிஷ் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பினாலும், இப்போது முதன்மையான கவலை சுதந்திரம் பற்றியதாகும். ஜிப்ரால்டார் பிரச்சினையில் ஸ்பெயினின் பொதுக் கருத்து தொடர்ந்து கண்காணிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.
ஆனால் 2018 ஆம் ஆண்டின் தேசிய கருத்துக் கணிப்பு பிரெக்சிட்டிற்குப் பிந்தைய பேச்சுவார்த்தைகள் பற்றி சிறுபான்மையினர் மட்டுமே அறிந்திருப்பதாகக் குறிப்பிடுகிறது.
ஜிப்ரால்டாரின் எதிர்காலநிலை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.
Brexitன் விளைவாக இங்கிலாந்தில், 2023 வாக்கெடுப்பின்படி, ஒரு சிறுபான்மையினர் மட்டுமே ஜிப்ரால்டர் பிரிட்டிஷாராக இருக்கிறாரா அல்லது அதைப்பற்றிய கருத்தைக் கொண்டிருக்கிறார்களா என்பதில் அக்கறை கொண்டுள்ளனர்.