பிரித்தானியாவில் இன்று பொதுத் தேர்தல்: இரண்டு தமிழர்கள் போட்டி – உலக அரசியலில் அதிகரிக்கும் தமிழர்களின் செல்வாக்கு

பிரித்தானியாவில் இன்று பொதுத் தேர்தல்: இரண்டு தமிழர்கள் போட்டி – உலக அரசியலில் அதிகரிக்கும் தமிழர்களின் செல்வாக்கு

பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை (04.07.2024) பொதுத் தேர்தல் (britain general election 2024) நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் தொழில் கட்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் பல கருத்துக் கணிப்புகள் வெளியாகியுளள்ன.

தொழில் கட்சி வெற்றிபெற்றால் 14 ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி செய்திவருதுடன், பலமுறை கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியமை உள்ளிட்ட காரணங்களால் பிரதமர்களும் மாறினர்.

தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் மீது மக்கள் பெரும் எதிர்பார்ப்பை ஆரம்பத்தில் வைத்திருந்த போதிலும் தற்போது அவரது செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது.

இந்த நிலையில், இம்முறை முதல் முறையாக இரண்டு தமிழிர்கள் பிரித்தானிய பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

தொழிலாளர் கட்சியின் சார்பாக கிருஷ்ணி ரிஷிகரன் (chrishni reshekaron) போட்டியிடுகிறார். உமா குமாரன் (Uma Kumaran) லிபரல் கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.

அதேபோன்று ஜாகிர் ஹுசேன் என்ற தமிழ் பேசும் இஸ்லாமியரும் லிபரல் கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.

வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானியாவில் தமிழர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்தத் தேர்தலை உற்று நோக்கி வருகின்றனர்.

தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிடும் கிருஷ்ணி ரிஷிகரன் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்பதுடன், பிரித்தானியாவில் கவனிக்கத்தக்க ஒரு பெண்ணாகவும் உள்ளார்.

கிருஷ்ணி ரிஷிகரன் இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அவரது தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று உமா குமாரனுக்கும் வெற்றிவாய்ப்புகள் இருப்பதாக இவரது தொகுதியில் உள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானிய தேர்தலில் ஈழத் தமிழர் ஒருவர் வெற்றிபெற்றால் அது இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளுக்கு வலுவாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழில் கட்சி தமது தேர்தல் அறிக்கையில் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் முக்கிய அவதானம் செலுத்தியுள்ளதால் கிருஷ்ணி ரிசிகரனின் வெற்றியை உலகத் தமிழர்கள் உற்றுநோக்கியுள்ளனர்.

இதேவேளை, கனடாவின் அரசியலில் தமிழர்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறும் சந்தர்ப்பங்களும் உருவாகியுள்ளது. கடந்தமுறை கெரி ஆனந்த சங்கரி நாடாளுமன்றத்துக்கு தெரிவானதுடன், அமைச்சுப் பொறுப்புக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தமிழ் மக்கள் ஓரளவு அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாக உள்ளனர். இம்முறை அமெரிக்க தேர்தலிலும் சில தமிழர்கள் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருவதால் இவர்கள் அனைவரும் ஒரு பொது இணக்கப்பாட்டுடன் செயல்படும் தேவை எழுந்துள்ளது. இது ஈழத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பெரும் பலமாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களும் மேற்கத்திய அரசியலில் செல்வாக்கும் செலுத்தும் நபர்களாக உள்ளனர்.

இவர்களும் ஈழத் தமிழர்களும் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களுக்கான பொது அரசியல் கோட்பாடுகளை வகுத்து செயல்படுவதன் மூலம் சர்வதேச ரீதியில் தமிழர் உரிமைக்கான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்.

பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப தமிழர்கள் தமக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்து ஓரணியில் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பு.

CATEGORIES
Share This