மோடியின் பதவியேற்பு விழா ஜூன் 9க்கு பிற்போடப்பட்டது!
டெல்லியில் ஜூன் 9ஆம் திகதி மாலை நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 8ஆம் திகதி பிரதமர் மோடி பதவியேற்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இவ்விழா ஒருநாள் பிற்போடப்படுவதாக தெரிகிறது.
இந்தப் பதவியேற்பு விழாவில் தெற்காசிய தலைவர்கள் பலர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவிருப்பதை ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களை தொடர்ந்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், பாஜகவுக்கு தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கூட்டணி பலத்துடன் பாஜக ஆட்சிஅமைக்கிறது.