தமிழ் பொது வேட்பாளர்; இனக்கலவரங்கள் வெடிக்காது

தமிழ் பொது வேட்பாளர்; இனக்கலவரங்கள் வெடிக்காது

பொதுவேட்பாளரை முன்னிறுத்தினால் தமக்கு வேண்டிய சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது போய்விடும் என்று பலர் அஞ்சுகின்றார்கள்.இனக்கலவரம் வெடிக்கும் என்கின்றார்கள். இன்றைய ஆபத்தான பொருளாதார சூழலில் கலவரங்கள் ஏதேனும் வெடித்தால் நாட்டின் நிலை அதலபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்பதை எமது அரச தலைவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். ஆகவே கலவரங்கள் ஏற்பட விடமாட்டார்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கட்சிகளின் மே தின நிகழ்வு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய முன்றிலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

போராட்டம் இல்லாது நாம் எமது இன்றைய இழிநிலையை மாற்ற முடியாது. போராட்டமனோநிலையை நாங்கள் கைவிட்டோமானால் இழந்த உரிமைகளை நாம் திரும்பவும்பெறமுடியாது . ஆயுதமேந்திப் போராடுவது மட்டும் போராட்டம் என்று நாம் நினைக்கக்கூடாது. அவ்வாறான ஒரு மனநிலையில்தான் இன்று ஒரு தமிழ்ப்பேசும்பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்கவேண்டும் என்றுசொல்லிவருகின்றோம்.

பொதுவேட்பாளர் தேர்தலில் நாம் தேர்தலில் வெல்ல போட்டியிடவில்லை. பின் எதற்காக

என்று கேட்டால் எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றை வட கிழக்கு மாகாணங்களில் பெற ஆவனசெய்யவுமேதான் இந்த ஏற்பாட்டை வலியுறுத்துகின்றோம்.

ஐ.நா வினால் வடகிழக்கு மாகாணங்கள் மக்கள் தீர்ப்பிற்கு விடப்பட்டால் மக்களின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். தமிழர்களாகிய நாம் எமது

வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து சில போராட்டங்களில் ஈடுபட வேண்டும். வன்முறை தேவையில்லை. பட்டினி கிடக்க அவசியமில்லை. ஆனால் பொது வேட்பாளரை முன் நிறுத்தி எமது தமிழ்ப் பேசும் உறவுகளை ஒன்றிணைத்து எமக்கென உலக அரங்கத்தில் சில நன்மைகளைப் பெற முயற்சிப்பதே இந்தப் போராட்டம்.

தக்க பொதுவேட்பாளர் ஒருவரை நாம் முன்னிறுத்தினால் அவர் மும்மொழிகளிலும் எமது வரலாறு பற்றி, எமக்கிழைக்கப்பட்ட அநியாயங்கள் பற்றி,இன்னல்கள்,

பாகுபாடுகள் பற்றி உலகுக்கு எடுத்துரைத்து எமது வடக்கு கிழக்கு மக்களின்எதிர்பார்ப்புக்களை ஐக்கிய நாடுகள் நடத்தக்கூடிய தகுந்த மக்கள் வாக்கெடுப்பின் மூலம்வெளிக் கொண்டுவர முடியும் என்ற கருத்தை நிலைநாட்டமுடியும்.

பலர் பொதுவேட்பாளரை முன்னிறுத்தினால் தமக்கு வேண்டிய சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது போய்விடும் என்று அஞ்சுகின்றார்கள். அது தவறு.

பொதுவேட்பாளருக்கு நாம் எமது முதல் வாக்கை அளித்துவிட்டு 2ஆம் 3ஆம் விருப்பு வாக்குகளை நாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு அளிக்க முடியும். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பேணப்படும். எமது எதிர்பார்ப்புக்கள் உலகறியச் செய்யப்படும். அதே நேரத்தில் எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் இடமளிக்கப்படும். இவ்வாறுசெய்வதால் இனக்கலவரங்கள் வெடிக்கவேண்டிய அவசியம் எதுவும் ஏற்படாது.

இன்றைய ஆபத்தான பொருளாதார சூழலில் கலவரங்கள் ஏதேனும் வெடித்தால் நாட்டின் நிலை அதல பாதாளத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்பதை எமது அரச தலைவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். ஆகவே கலவரங்கள் ஏற்பட விடமாட்டார்கள்.

ஒற்றையாட்சியானது இந்த நாட்டை சிங்கள மக்களுக்காக, சிங்கள மக்களால் பெரும்பான்மை சிங்கள மக்களின் நலன் பேணி நடத்தப்படும் ஒரு ஆட்சி.எவர் ஆட்சிக்கு வந்தாலும் நடக்கப் போவது சிங்கள இனவழி ஆட்சியே.

வட கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் எமக்கு வேண்டாத பாதுகாப்பை எமக்களிப்பது சிங்கள இராணுவமே. எமது காணிகளை சூறையாடுவது சிங்களவர் வழிநடத்தும் அரசதிணைக்களங்களே. எமது தாய் மண்ணில் பௌத்த சின்னங்களை அமைப்பதும் சிங்கள பௌத்தபிக்குகளே. சிங்களவர்களால் சிங்களவர்க்கென்று சிங்களவர் மத்தியிலிருந்து நடாத்தப்படும் ஒரு இனவழி ஆட்சியே எமது ஒற்றையாட்சி.

சட்டப்படி சுயநிர்ணய உரிமை எமக்குண்டு. ஆனால் அதைப் பற்றி மௌனம் காத்து வருகின்றன தொடர்ந்து வரும் அரசாங்கங்கள். ஆனால் அந்த உரிமையை வடகிழக்கு மாகாண மக்கள் ஒரு வாக்கெடுப்பில் பாவிக்க இடம் தாருங்கள் என்று நாம் அதனைக் கேட்டால் எம்மைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பார்கள். ஆனால் ஐனாதிபதி வேட்பாளர் அதைக் கோரலாம்.

எமக்கு சுயநிர்ணய அதிகாரம் இருக்கின்றது என்று யார் சொன்னார்கள்? இன்று இனவழியாட்சியே இங்கு நடந்து வருகின்றது. அதை மாற்ற வேண்டும்.

அவ்வாறு மாற்றுவதாயின் நாம் ஒற்றுமைப்பட வேண்டும். எமது குரல் ஐ.நா வரையில் கேட்க வேண்டும். கேட்டதன் பின்னர் வடகிழக்கில் மக்கள் தீர்மானத்திற்காக சர்வதேச

நாடுகளால் இங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதை உலகுக்கு எடுத்துக் கூற ஒரு தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் பங்குபற்ற வேண்டும். அவருக்கு எம் தமிழ் மக்கள் வாக்களித்து எமது கோரிக்கையை உலகறியச் செய்ய வேண்டும். இதுவே தமிழ் பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் பங்கு பற்ற வலியுறுத்துவோரின் உத்தியாகும். எமக்குள் பிரிவினை இல்லாது தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This