பாகிஸ்தானில் இந்துக் கோவில் இடித்துத் தகர்ப்பு!
பாகிஸ்தானில் புராதனமிக்க இந்துக் கோவிலொன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையையொட்டி கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லாண்டி கோடல் பஜார் நகரில் அமைந்துள்ள கைபரா கோவில் 1947ஆம் ஆண்டு முதல், பக்தர்கள் யாரும் வழிபடாதக் காரணத்தால் மூடப்பட்டுள்ளது. சிதைவடைந்து காட்சியளித்த குறித்த கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டது.
இந்துக் கோவில் அமைந்திருந்த இடத்தில், புதிதாக வர்த்தக வளாகம் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் இந்துக் கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுடைய வரலாற்றுக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்து மறுசீரமைப்பது, பாகிஸ்தானின் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரச துறைகளின் பொறுப்பு என பாகிஸ்தான் இந்துக் கோவில் நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.