காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி ரஷ்ய சுற்றுலா பயணி உயிரிழப்பு!
காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலரை காணவில்லை. 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் குல்மார்க் அமைந்துள்ளது. அங்கு தற்போது பனிப்பொழிவு அதிகரித்திருக்கிறது. இதன்காரணமாக குல்மார்க் பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இயற்கை அழகை ரசிக்கும் அவர்கள் பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரஷ்யாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குல்மார்க்கில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் நேற்று கொங்தூரி பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார். சிலரை காணவில்லை. அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
81 பேர் மீட்பு: ராஜஸ்தானின் உதய்பூரை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்களின் வாகனங்கள் நேற்று முன்தினம் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக 74 மாணவர்கள், 7 ஆசிரியர்கள் சாலையின் நடுவே சிக்கிக் கொண்டனர். ராணுவ வீரர்கள் துரிதமாக செயல்பட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 81 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து ஒரு மாணவர் கூறும்போது, நாங்கள் சென்ற வாகனத்தின் முன்பு 500 மீட்டர் தொலைவில் மண்சரிவு ஏற்பட்டது. எங்கள் வாகனத்தின் பின்பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டு நடுவில் சிக்கி கொண்டோம். ராணுவ வீரர்கள் எங்களை பத்திரமாக மீட்டனர் என்று தெரிவித்தார்.