கிளிநொச்சி மாவட்ட விவசாய குழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட விவசாய குழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட விவசாய குழு கூட்டம் இன்று (08) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர், கமநல சேவை திணைக்களத்தினர், நீர்ப்பாசனத் திணைக்களத்தினர், விவசாய அமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள், பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கையில் 100% வெற்றியாக முன்னெடுக்க வேண்டும்.

தற்பொழுது குளங்களின் நீர்மட்டம் அடைவு மட்டத்தில் காணப்படுவதன் காரணமாக உரிய காலத்தில் சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்படுமாயின் கடந்த காலங்களை பார்க்க அதிகமான அளவு நெற்செய்தி மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு அமைவாக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட வேண்டும் என தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சிறுபோக செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களில் உப உணவு பயிற்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தீர்மானங்கள் எட்டப்பட்டது.

அத்துடன் வீதிகளில் நெல்லினை உலர விடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், காபற் வீதிகளில் காணப்படுகின்ற நச்சுத்தன்மை மனித உடலுக்கு பலவகை நோய்களை ஏற்படுத்தகூடும் என்பதால் வீதிகளில் நெல்லை உலரவிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தற்பொழுது பல பகுதிகளிலும் விவசாயிகளிடமிருந்து மேற்கொள்ளப்படும் நெல் கொள்வனவில் பாரிய மோசடி இடம் பெறுவதாக பல தரப்பினரும் குற்றச் சுமத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், நெல் கொள்வனவில் அளவிடப்படும் தராசுகளில் சந்தேகங்கள் ஏற்படுமாயின் உடனடியாக மாவட்ட செயலகத்திற்கு தகவல் வழங்கப்படுமாயின் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல் கொள்வனவில் ஈடுபடும் தராசுகள் பார்வையிடப்பட்டு குறித்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This