நமீபியா ஜனாதிபதி காலமானார்!

நமீபியா ஜனாதிபதி காலமானார்!

தெற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவின் ஜனாதிபதி ஹாகே கெயின்கோப் (82) புற்றுநோயால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் நமீபியா ஜனாதிபதியாகப் பதவி வகித்து வந்த கெயின்கோப்பின் இரண்டாவது மற்றும் இறுதி பதவிக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைய இருந்தது.

2014-ஆம் ஆண்டுமுதல் புற்றுநோயுடன் போராடி வந்த அவா், சிகிச்சைக்காக கடந்த ஜனவரி 8-ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றாா்.

சிகிச்சை முடிந்து கடந்த 31-ஆம் திகதி நாடு திரும்பினாா். இந்நிலையில், மீண்டும் பாதிப்பு தீவிரமடைந்ததையடுத்து உள்ளூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், நோயின் தீவிரத்தால் உயிரிழந்தாா்.

தற்காலிக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள அங்கோலோ மெபும்பா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்த இக்கட்டான நேரத்தில் மக்கள் அமைதிகாக்க வேண்டும். நாட்டின் நிா்வாகம் தொடா்பான அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அமைச்சரவை உடனடியாக கூட்டப்படுகிறது’ என்று கூறியுள்ளாா்.

ஜொ்மனி மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் அடிமைப்பட்டிருந்த நமீபியா கடந்த 1990-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அப்போது முதல் 2002 வரை அந்நாட்டின் முதல் பிரதமராக கெயின்கோப் இருந்தாா். 2002-இல் இருந்து சில ஆண்டுகள் நாட்டின் வா்த்தக அமைச்சராகவும், மீண்டும் 2008 முதல் 2012 வரை பிரதமராகவும் பதவியை வகித்தாா்.

தொடக்க காலத்தில் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகப் போராடிய அவா், பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தாா். நமீபியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு அமெரிக்கா, சீனா மற்றும் பல்வேறு நாடுகளுடன் கெயின்கோப் நட்புடன் செயல்பட்டு வந்தாா். அவரது மறைவுக்கு சா்வதேச தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

CATEGORIES
TAGS
Share This