மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனர்!

சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பிற்கான வசதிகள் தொடர்பான விசாரணையின்போது மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பர்க் (Mark Zuckerberg) எழுந்து நின்று அங்கிருந்த பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் போதுமான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இல்லாததால் குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினர் சைபர் புல்லியிங் (Cyber Bullying) எனப்படும் இணைய மிரட்டல்களுக்கும், பாலியல் தொல்லைகளுக்கும், தற்கொலைகளுக்கும் கூட ஆளாகின்றனர் என அமெரிக்க செனட் அமைப்பினர் குற்றம் சாட்டினர்.

சமூக வலைதளங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் இந்த விசாரணையில் பங்குபெற்றனர். தங்கள் குழந்தைகள் அடந்த துன்பங்களை எடுத்துரைத்தனர். இந்த வலைதளங்கள் தங்களது லாபங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கு போதுமான வசதிகளை மேம்படுத்தாததாக குற்றம் சாட்டினர்.

இந்த விசாரணையில் செனட்டர் ஜோஷ் ஹாவ்ளே கேட்டுக் கொண்டதனடிப்படையில், மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பர்க், அங்கிருந்த குடும்பங்களிடம் திரும்பி, ‘நீங்கள் பட்ட அனைத்து கஷ்ட்டங்களுக்கு நான் வருந்துகிறேன். மன்னித்துக்கொள்ளுங்கள். இது யாருக்கும் நடக்கக்கூடாது’ என அவர் கூறினார்.

ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் தளங்களைக் கையாளும் மெட்டா மட்டுமல்லாது, எக்ஸ், ஸ்னாப் சாட் (Snap chat), டிஸ்கார்ட் (Discord) போன்ற சமூக வலைதளங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இந்த விசாரணையில் பங்குபெற்றனர்.

‘உங்கள் அனைவர் கையிலும் ரத்தம் படிந்திருக்கிறது. உங்களது தளங்கள் மக்களைக் கொன்றுவருகிறது’ என செனட்டர் சின்ட்சி கிரஹாம் கூறினார்.

‘இணையதளம் உருவானதிலிருந்து குற்றவாளிகளும் இங்கு பெருகிவருகிறார்கள். அவர்களிடமிருந்து குழந்தைகளுக்கும், பதின் பருவத்தினருக்கும், பெற்றோருக்கும் பாதுகாப்பை அளிக்க நாங்கள் கடுமையாக உழைத்துவருகிறோம்’ என மார்க் தெரிவித்தார்.

மேலும், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு அந்நியர்கள் யாரும் குறுஞ்செய்தி அனுப்ப முடியாதபடி புதிய வழிமுறைகளைக் கொண்டுவருவதாக மார்க் உறுதியளித்தார். வன்முறையைத் தூண்டும் பதிவுகள், தற்கொலை தொடர்பான பதிவுகளை அவர்கள் பார்வையிலிருந்து நீக்க முயற்சிப்பதாக அவர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This