அரசின் இரகசிய ஆவணங்களை கசிய விட்டதாக முறைப்பாடு: இம்ரான்கானுக்கு 10 ஆண்டுகள் சிறை!

அரசின் இரகசிய ஆவணங்களை கசிய விட்டதாக முறைப்பாடு: இம்ரான்கானுக்கு 10 ஆண்டுகள் சிறை!

அரசின் இரகசிய ஆவணங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். அந்நாட்டின் இராணுவ ஆதரவை இழந்தபின், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இம்ரான் கான் கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக ஏற்பட்ட வன்முறையை தடுக்க, அவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி மூத்த தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது கட்சியின் சின்னமும் முடக்கப்பட்டது.

இந்நிலையில், பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார். அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் பெப்ரவரி 8ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் சின்னம் முடக்கப்பட்டுள் ளதால், இதில் இம்ரானின் பிடிஐ கட்சியால் போட்டியிட முடியவில்லை. அவரது கட்சித் தலைவர்கள் சுயேச் சைகளாக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இம்ரான் கான் தற்போது அடியலா சிறையில் உள்ளார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில், அவர் மீது ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அரசின் இரகசிய ஆவணங்களை கசியவிட்டதாக அவர் மீதும் பிடிஐ கட்சியின் துணைத் தலைவராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்த ஷா மெகமூத் குரேஷி மீதும் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு (எப்ஐஏ) தொடர்ந்த வழக்கில் தற்போது இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட முடியாது.

இது குறித்து மனித உரிமை ஆர்வலரும், அரசியல் நிபுணருமான தவுசெப் அகமது கான் கூறுகையில், ‘‘நீதி படுகொலை செய்யப்பட்டுள்ளது. இந்த அநீதியால், மக்கள் இடையே இம்ரானின் புகழ் மேலும் அதிகரிக்கும்’’ என்றார்.

CATEGORIES
TAGS
Share This