பின்லாந்தில் ஜனாதிபதி தேர்தல் இன்று!

பின்லாந்தில் ஜனாதிபதி தேர்தல் இன்று!

ஐரோப்பிய தேசமான பின்லாந்தில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (28) நடைபெறுகிறது.

பின்லாந்தின் தற்போதைய ஜனாதிபதி சௌலி நீநிஸ்டோவின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதி தேர்தலில் சுமார் 4.50 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது.

ஜனாதிபதி தேர்தலில், 9 வேட்பாளர்கள் களம் காணும் சூழலில், எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலே உள்ளதாக அங்குள்ள கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், முன்னாள் பிரதமர் அலெக்சாண்டர் ஸ்டப்(55) மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ(65) ஆகியோர் முன்னணி பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

செவ்வாயன்று (30) முதற்சுற்று வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாகவுள்ளன. அதில் அதிக வாக்குகள் பெறும் 2 வேட்பாளர்கள் இடையே, பெப்ரவரி 11-ஆம் திகதி இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். அதில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ரஷ்யாவின் அண்டை நாடான பின்லாந்து கடந்த ஏப்ரலில், நேட்டோ உறுப்பினராகியிருப்பதன் மூலம் ரஷ்யாவின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், பின்லாந்து ஜனாதிபதி பதவி அதிகாரமிக்க பதவியாக உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கைகளை வகுக்கும் அதிகாரம் பின்லாந்து ஜனாதிபதிக்கு உண்டு. ஆகவே இந்த ஜனாதிபதி தேர்தல் ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This