‘ஜி.ஜே.9827டி’ கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் கண்டுபிடிப்பு!
பூமியை போன்று வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதில் சூரிய குடும்பத்துக்கு வெளியே பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டு பிடித்துள்ளது.
நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜிஜே 9827டி என்று பெயரிடப்பட்ட கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் விட்டத்தில் ஏறக்குறைய இரண்டு மடங்கு இருக்கும் இந்த கிரகத்தில் நீர் நிறைந்த வளிமண்டலங்கள் இருப்பதை ஹப்பிள் தொலைநோக்கி தற்போது கண்டறிந்துள்ளது. இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மீனம் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஒரு குறு விண்மீனை சுற்றி வரும் இந்த கிரகம் ஒவ்வொரு முறை இந்த சூரியனை கடந்து செல்லும் நேரத்தில் எடுக்கப்படும் நிறமாலை தரவுகளின் அடிப்படையில் அந்த கிரகத்தில் உள்ள மூலக்கூறுகள் கண்டறியப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறு நிறைந்த வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பூமியில் உள்ள கடலை போன்று இரண்டு மடங்கு அதிகமாக நீராவியை இந்த கிரகம் பெற்றிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த கிரகம் வெள்ளி கிரகத்தை போல 800 டிகிரி பாரன்ஹீட் வெப்பமாக இருப்பதால், வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக கூறப்படுகிறது.
பாறைகள் நிறைந்த கிரகங்களில் வளிமண்டலங்களின் நீர் மூலக்கூறுகள் இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான இது ஒரு முக்கியமான படியாகும் 97 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மீனம் நட்சத்திர மண்டலத்தில் பூமியைப் போன்ற வளிமண்டலம் பெற்ற ஒரு கிரகத்தை கண்டறிந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.
இதற்கு முன்பு கண்டறிந்த நீர் மூலக்கூறு ஆக்சிஜன் இருக்கும் கிரகங்களை ஒப்பிடுகையில், தற்போது கண்டறிந்துள்ள கிரகம் மிக அருகில் இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.