1528 முதல் 2024 வரை – ராமர் கோயில் கடந்து வந்த பாதை!

1528 முதல் 2024 வரை – ராமர் கோயில் கடந்து வந்த பாதை!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலுக்காக 1528 முதல் 2024 வரை நிகழ்ந்த போராட்டம், சட்டப் போராட்டம் தொடர்பான வரலாற்றுச் சுவடுகள்…

1528 பாபர் மசூதி தோற்றம்: முகலாயப் பேரரசர் பாபரின் தளபதி மிர் பாகியின் முயற்சியால் 1528-ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி கட்டும் பணி தொடங்கியது. ஒரு இந்து கோயிலின் இடிபாடுகளின் மீது இந்த மசூதி கட்டப்படுவது தெரியவந்ததால் ராமர் கோயில் இயக்கம் தொடங்கியது. இதனால் இந்து, முஸ்லிம் இடையே பல தசாப்த காலத்துக்கு விவாதமும் மோதலும் தொடர்கதையானது.

1751 உரிமை கோரிய மராத்தியர்கள்: எழுத்தாளரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான (பாஜக) பல்பிர் புஞ்ச் ‘ட்ரிஸ்ட் வித் அயோத்யா: டிகாலனிசேஷன் ஆப் இந்தியா’ என்ற தனது நூலில், அயோத்தி, காசி மற்றும் மதுரா ஆகியவற்றின் கட்டுப்பாட்டை மராத்தியர்கள் நாடியதாகவும் இது பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்ததாகவும் கூறியுள்ளார்.

1858 நிஹாங் சீக்கியர் கோரிக்கை: பாபர் மசூதி உள்ள இடம் ராமர் பிறந்த இடம் என நிஹாங் சீக்கியர்கள் கடந்த 1858-ல் உரிமை கோர முயன்றனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “மசூதி உள்ள இடம் ராமர் பிறந்த இடம் என நிஹாங் சீக்கியர்கள் உரிமை கோரி உள்ளனர்” என குறிப்பிட்டது.

1885 சட்ட ரீதியிலான முதல் கோரிக்கை: 1885-ல் பாபர் மசூதிக்கு வெளியே ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி நிர்மோஹி அகாராவின் அர்ச்சகர் ரகுபர் தாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டாலும், சட்டமுன்னுதாரணமாக அமைந்ததுடன் இந்த விவகாரத்தை உயிர்ப்புடன் வைக்கவும் உதவியது.

1950-1959 வழக்குகள்: கடந்த 1950 முதல் 1959 வரையிலான காலத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் சிலை வழிபாடு நடத்த உரிமை கோரி நிர்மோஹி அகாரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதுபோல அந்தப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது தொடர்பாக சன்னி மத்திய வக்ப் வாரியம் மனு தாக்கல் செய்தது.

1986-1989 பாபர் மசூதி பூட்டுகள் திறப்பு: மத்தியில் ராஜீவ் காந்தி தலைமையிலான ஆட்சி நடைபெற்ற 1986-ம் ஆண்டு, சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்துவதற்கு வசதியாக பாபர் மசூதி வளாகத்தின் பூட்டுகள் திறக்கப்பட்டன. 1990-ம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு காலக்கெடு விதித்தது. இந்த காலகட்டத்தில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ரத யாத்திரையை தொடங்கினார். ராமஜென்மபூமி இயக்கத்துக்கு பாஜக, விஎச்பி உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு அளித்தன.

1992 பாபர் மசூதி இடிப்பு: கடந்த 1992-ம் ஆண்டு இந்து அமைப்பினரால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கலவரங்கள் மூண்டன.

1993-1994 கலவரங்கள்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் மதக் கலவரங்கள் வெடித்தன. இதில் பலர் உயிரிழந்ததுடன் ஏராளமான சொத்துகள் சேதமடைந்தன. அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசு சர்ச்சைக்குரிய இடத்தை கையகப்படுத்தியது. இதை எதிர்த்து இஸ்மாயில் பரூக்கி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அரசின் முடிவு சரி என தீர்ப்பளித்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிடலாம் என்றும் அறிவித்தது.

2002-2003 தொல்லியல் ஆய்வு: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கு விசாரணை 2002-ல் தொடங்கியது. அப்பகுதியில இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆய்வு நடத்தியது. இதில் மசூதிக்கு கீழ் இந்து கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக ஏஎஸ்ஐ தெரிவித்தது.

2009-10 லிபரான் அறிக்கை தாக்கல்: பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் ஆணையம், தனது அறிக்கையை 2009-ல் அரசிடம் தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் நிர்மோஹி அகாரா ஆகியவை சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

2019 வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு மட்டுமே சொந்தம் என்றும் அங்கு ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் 2019-ல் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. அதேநேரம் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டது.

2020 ராமர் கோயில் அடிக்கல்: ராமர் கோயில் கட்டுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கோயில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை நிறுவப்பட்டது. இதன்மூலம் நீண்டகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

2024 ராமர் கோயில் திறப்பு விழா: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This