“இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசும், முதல்வரும் கொண்ட மாநிலம் அசாம்” – ராகுல் காந்தி

“இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசும், முதல்வரும் கொண்ட மாநிலம் அசாம்” – ராகுல் காந்தி

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசும், முதல்வரும் கொண்ட மாநிலம் அசாம் மாநிலம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த 14ஆம் திகதி மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது. தற்போது அசாமில் நடந்து வரும் யாத்திரை வியாழக்கிழமை மதியம் அங்குள்ள சிவசாகர் மாவட்டத்தில் இருந்து மரியானி நகரை அடைந்தது.

அப்போது, சிவசாகர் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, “அசாமில் ஆளும் பாஜக அரசும் அதன் கொள்கை ஊற்றான ஆர் எஸ் எஸ் அமைப்பும் இணைந்து பொதுமக்கள் பணத்தை சூறையாடி வருகிறது. இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலம் என்றால் அது அசாம் தான். பெரிய ஊழல்வாதி என்றால் அது அசாம் முதல்வர்தான். இந்த யாத்திரையில் அசாம் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் தோலுரிப்போம். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் ஒட்டுமொத்த குடும்பமும் ஊழலில் ஈடுபட்டுள்ளது. அவரது மனைவி, குழந்தைகள் அனைவரும் ஊழல்வாதிகள். பணத்தைக் கொண்டு அசாம் மக்களை விலைக்கு வாங்கலாம் என்று அவர் நினைக்கிறார். அசாம் மக்களை அப்படி விலைக்கு வாங்கிவிட முடியாது. மணிப்பூர் பிரிந்து கிடக்கிறது. மாதக்கணக்கில் அங்கு வன்முறை நிலவுகிறது. மக்கள் வன்முறையால் வீடுகளை, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். அங்கே இன்னும் அமைதி திரும்பவில்லை. இருந்தும் இதுவரை பிரதமர் அங்கு செல்லவில்லை” என்றார்.

ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்த முதல்வர் பிஸ்வ சர்மா, “என்னைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே காந்தி குடும்பம் தான் ஊழல் நிறைந்த குடும்பம். அவர்கள் ஊழல்வாதிகள் மட்டுமல்ல. போலியானவர்கள். அவர்களின் குடும்பப் பெயர் காந்தி கிடையாது. போலிப் பெயரை சுமந்துகொண்டு திரிகிறார்கள் என்றார்.

இதற்கிடையில், யாத்திரையை ராகுல் காந்தி நிர்ணயிக்கப்பட்ட பாதையில் மேற்கொள்ளாமல் வேறு பாதைகளில் சென்றதாகக் கூறி அசாம் மாநில அரசு ராகுலின் நடைபயணத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This