சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு!
சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் இன்று காலை 8 மணிமுதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி, 10 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம், அரச மருந்தாளர்கள் சங்கம், மருத்துவ ஆய்வக தொழில் வல்லுநர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை தாதியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் நிறைவுகாண் சுகாதார சேவை ஒன்றிணைந்த முன்னணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னதாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
குறித்த கொடுப்பனவு தங்களுக்கு வழங்கப்படாவிட்டால் சகல தொழிற்சங்கங்களும் இணைந்து தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்வாக மற்றும் முகாமைத்துவ குறைபாடு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை, எந்த விதத்திலும் அதற்கு பொறுப்பேற்க முடியாத மக்கள் மீது திணிக்கப்படும் சம்பவம் இடம்பெறுவதாகவும் அந்த சங்கத்தினர் தங்களது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.