வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் கைது!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கிற்கு நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வவுனியா ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
இந்தநிலையில் ஜனாதிபதியினை சந்திக்க வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முற்பட்ட போது, காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரி வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனைதொடர்ந்து காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டே உறவுகள் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா உள்ளிட்ட இருவர் இதன்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா உள்ளிட்ட குழுவினருக்கு இன்றையதினம் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு நீதவான் நீதிமன்றத்தினால் முன்னதாக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.