சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவின் படி, ஆட்சேபனைகளை தாக்கல் செய்யாத சட்டமா அதிபருக்கு, உயர் நீதிமன்றம் இன்று கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இனந்தெரியாத குழுவொன்றினால், 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில், மக்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணையை நடத்துமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில், ‘கிரீஸ் பேய்’ எனப்படும் இனந்தெரியாத குழுவின் அச்சுறுத்தல் தொடர்பில், உரிய விசாரணை நடத்துமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், இன்றைய தினம் மனு பரிசீலிக்கப்பட்ட போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை எந்த ஆட்சேபனையும் தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் லக்மாலி கருணாநாயக்க, ஆட்சேபனைகள் உரிய முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும், ஆட்சேபனைகள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது உறுதியாவதாக நீதியரசர் எஸ்.துரைராஜா தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில், பிரதி மன்றாடியார் நாயகம், அதற்குரிய காரணத்தை தெளிவுபடுத்த முற்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் பெறுமதியான நேரத்தை வீணடிக்காமல் மனுதாரர்களிடம் நூறு ரூபாய் செலவில் ஆட்சேபனைகளை கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதியரசர் எஸ்.துரைராஜா வலியுறுத்தினார்.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம், ஆட்சேபனைகளை தாக்கல் செய்யாமைக்கு உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்த நிலையில் குறித்த வழக்கின் விசாரணைகளை அடுத்த வருடம் ஜூலை 30ஆம் திகதி வரை பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This