நிபந்தனைகளின் கீழ் இலங்கைக்கு நிதி வழங்க ADB தீர்மானம்!

நிபந்தனைகளின் கீழ் இலங்கைக்கு நிதி வழங்க ADB தீர்மானம்!

அடுத்த நான்கு ஆண்டுகளில் மொத்த பாதீட்டுக்கு ஆதரவாக இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை திட்டத்துக்கான பணிப்பாளர் டகாஃபுமி கடானோ ((Takafumi Kadono) இதனைத் தெரிவித்துள்ளார்.

500 மில்லியன் முதல் 600 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியை இலங்கையின் 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு ஆதரவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த தொகை, நிபந்தனைகளின் அடிப்படையில் மீள பெறப்படும் எனவும் இது நன்கொடை அல்லவெனவும் டகாஃபுமி கடானோ ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பு பொதியின் இரண்டாவது தவணை அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடனான நான்கு வருட கடன் வேலைத்திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இலங்கையின் பொருளாதாரம் வலுவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் முதல் மதிப்பாய்வு அடுத்த வாரம் உலகளாவிய கடன் வழங்குநரால் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாவது தவணையாக சுமார் 334 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்கு வழங்கப்படும்.

CATEGORIES
TAGS
Share This