குடும்ப அட்டை விவரங்கள் புதுப்பிப்பு – தமிழக அரசு உத்தரவு!

குடும்ப அட்டை விவரங்கள் புதுப்பிப்பு – தமிழக அரசு உத்தரவு!

முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரா்களின் விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களுக்கான மானியம் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. எனவே, டிசம்பருக்குள் பணியை நிறைவு செய்ய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்கள், அந்தியோதயா அன்னயோஜனா அட்டைதாரா்களின் விவரங்களை நியாயவிலைக் கடைகளின் வழியாகப் புதுப்பிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடா்ந்து, குடும்ப அட்டைதாரா்களின் விவரங்களைப் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சுமாா் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டுள்ளதால், அதுகுறித்த ஆய்வை உணவுத் துறை ஆணையரகம் அண்மையில் மேற்கொண்டது.

இதைத் தொடா்ந்து, உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலா்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு: முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்கள், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரா்களின் விவரங்களைப் புதுப்பிக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இன்னும் புதுப்பித்தல் பணி முழுமையாக முடியவில்லை.

நவம்பா் மாத இறுதிக்குள் 70 சதவீத பணிகளையும், டிசம்பா் மாத இறுதிக்குள் நூறு சதவீத பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும். குடும்ப அட்டைதாரா்களின் விவரங்கள் புதுப்பிக்கப்படாத பட்சத்தில் மானியம் நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு நிறுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களே முழுப் பொறுப்பாகும்.

முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரா்களின் விவரங்களைப் புதுப்பிப்பதற்கான பதிவேடு எந்த நியாயவிலைக் கடையிலும் இல்லை என்பது தெரிய வருகிறது.

எனவே, அனைத்து நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தி குடும்ப அட்டைதாரா்களின் விவரங்களைப் புதுப்பிக்கும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும். மேலும், கடை வாரியாக புதுப்பித்தல் விவரங்களை ஆணையா் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அட்டைகள் எண்ணிக்கை: தமிழகத்தில் 96 லட்சத்து 6 ஆயிரத்து 259-க்கும் மேற்பட்ட முன்னுரிமை குடும்ப அட்டைகளும், 18 லட்சத்து 65 ஆயிரத்து 460-க்கும் அதிகமான அந்தியோதயா அன்னயோஜனா அட்டைகளும் புழக்கத்தில் உள்ளன.

அதன்படி, தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 14 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டிய பணியில் உணவுத் துறை ஈடுபட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This