

விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் மூலம் அடிக்கடி தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.
இவற்றை சுங்க இலாகாவினர் தடுத்து பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுங்க இலாகாவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது துபாயில் இருந்து விமானத்தில் வந்த கைதபரம்பில் சுஹைப் என்ற பயணி மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனை தொடர்ந்து அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அவர் வைத்திருந்த லுங்கிகள் சந்தேகப்படும்படி இருந்தன. அவற்றை ரசாயன சோதனைக்குட்படுத்திய போது அந்த லுங்கிகள் தங்கத்தில் தோய்க்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரிடமிருந்த 10 லுங்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டார்.
தங்கத்தை முழுமையாக பிரித்து எடுத்த பிறகுதான் லுங்கியில் எவ்வளவு தங்கம் கொண்டு வரப்பட்டது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் சுமார் ஒரு கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கலாம் என தெரிகிறது.
இதற்கிடையே மற்றொரு பயணி சுமார் 2,201.6 கிராம் எடை உள்ள தங்கத்தை குடுவைக்குள் மறைத்து கடத்தியது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்தும் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.