

கேரளாவில் பிரபல நடிகர் மர்ம மரணம்: பூங்கா அருகே காருக்குள் பிணமாக மீட்பு!
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாம்பாட்டி பகுதியில் ஒரு பூங்கா உள்ளது.
இந்த பூங்காவின் அருகே ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. அந்த காரின் கண்ணாடிகள் முழுவதும் ஏற்றப்பட்டிருந்த நிலையில் காருக்குள் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிய வந்தது. இதனை பூங்காவுக்கு வந்த பலரும் பார்த்தனர்.
ஆனால் அந்த நபர் காரில் இருந்து இறங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியை தட்டி பார்த்தனர். ஆனால் உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காரின் கண்ணாடியை உடைத்தபோது காருக்குள் இருந்தவர் உணர்வற்ற நிலையில் காணப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருதுத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக இருந்தது பிரபல நடிகர் வினோத் தாமஸ் என தெரியவந்தது.