

காசாவில் பாடசாலைகள் மீது குண்டுவீச்சு: 80 பேர் பலி!
காசாவில் இரண்டு பாடசாலைகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் ஐ.நா. சபை நடத்தும் அல்-பகுரா பள்ளியில் ஏராளமானோர் தஞ்சம் அடைந்து இருந்தனர். இந்த பாடசாலை மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின.
இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 50 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
அதே போல் வடக்கு காசாவின் தால்-அல்-ஜாதார் பகுதியில் உள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே பாடசாலைகள் மீதான தாக்குதலில் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபா லியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. நடத்தும் பாடசாலையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போர்க்குற்றம் என்றும் ஐ.நா. சபையை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் என்றும் எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் புகுந்து சோதனை நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்ததாக கூறி அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையே அல்-ஷிபா மருத்துவமனையில் இருந்து நோயாளிகள், மருந்துவ ஊழியர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டது என்றும் இதனால் மருத்துவமனையில் இருந்து பலர் வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் மருத்துவமனையில் மக்களை வெளியேற உத்தரவிடவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது. மருதுத்துவமனையின் இயக்குனரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதித்தாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்கள் தாமாக முன்வந்து வெளியேறுகிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறது.
அல்-ஷிபா மருத்துவமனையில் மின்சாரம் இல்லை, தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். அந்த மருத்துவமனை, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.