இஸ்ரேல்-ஹமாஸ் போரில் நேரடியாக ஈடுபட ஈரான் மறுப்பு?

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் நேரடியாக ஈடுபட ஈரான் மறுப்பு?

பாலஸ்தீனத்தை மையமாக கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர். இதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

ஈரான், கத்தார் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.

போர் 40 நாட்களை தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஈரான் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக நேரடியாக போர்க்களத்தில் இறங்கினால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக களம் இறங்கும் என்றும் அதன் மூலம் போர் பிற நாடுகளுக்கு பரவலாம் என உலக நாடுகள் கவலை தெரிவித்து வந்தன.

சில தினங்களுக்கு முன்பு ஈரான் ஜனாதிபதி அயதுல்லா அலி கமேனிக்கும், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவிற்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.

“ஹமாஸ் அமைப்பிற்கு தார்மீக மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவை ஈரான், தொடர்ந்து வழங்குமே தவிர நேரடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஈரான் ஈடுபடாது என்றும் ஈரானின் ஆதரவை கோரி வெளிப்படையாக பாலஸ்தீனத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளுக்கு ஹமாஸ் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றும் அச்சந்திப்பின் போது ஈரான் ஜனாதிபதி அலி கமேனி திட்டவட்டமாக ஹமாஸ் தலைவரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து முன்கூட்டியே ஈரானுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் ஈரானின் இந்த நிலைப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் இந்த முக்கிய முடிவில் உறுதியாக இருந்தால், போர் பரவல் குறித்த அச்சம் குறைந்து விடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This