

தமிழகத்தில் தினமும் 40 போ் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு!
தமிழகத்தில் தினமும் 40 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
டெங்கு உள்ளிட்ட நோய்களுக்காக தமிழகம் முழுவதும் வாரம் தோறும் சனிக்கிழமையில் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை டிசம்பா் மாதம் வரை 10 வாரங்களுக்கு நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்தது. அதன்படி, 3 வார மருத்துவ முகாம்கள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், 4-ஆவது வாரமாக சனிக்கிழமை தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் நடைபெற்ற முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
ஒவ்வொரு வாரமும் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்த முகாம்களில் பயன்பெறுகின்றனா். ஒவ்வொரு வாரமும் 1,000 முகாம்கள் என்று அறிவிக்கப்பட்டாலும், கூடுதலாகவே முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 3 வாரங்களில் 6,000-க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
பல்வேறு மாநிலங்களில் டெங்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று கடந்த 10 நாள்களுக்கு முன்பு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சி மூலமாகவும் பருவமழை தொடங்குவதற்கு முன்பே பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கிவிட்டோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு 6,777 என்ற எண்ணிக்கையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 564 போ் சிகிச்சையில் உள்ளனா். ஒவ்வொரு நாளும் 40 போ் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனா் என்றாா் அவா்.